Jan 25, 2011

அன்னை ஓர் தோழி..














பத்து மாதம்
செத்துப் பிழைத்து
பத்திரமாய் என்னை
பெத்து எடுத்து
பாலூட்டி வளர்த்தாள்
என் உடலை - தமிழ்
பாலூட்டி வளர்த்தாள்
என் உயிரை.!

ஊரறிய பொதுவாக
எனக்கோர் பெயர் வைத்தாள் - ஆனால்
தங்கம் வைரம் முத்து பவளம் என்று
பல பெயர் வைத்து
பல முறை என்னை அழைப்பாள்.!

நான் சிறு பிள்ளையில்
எனக்கு சோரூட்டுவாள்
நானவள் கையைக் கடித்தால் - அப்போதும்
என் பிள்ளைக்கு
பல் முளைத்துவிட்டதென்று
சில்லென்று சிரித்து மகிழ்வாள்.!

நான் சிறு பிள்ளையில்
என்னைக் குளிக்க வைப்பாள்
நான் அங்கும் இங்கும் ஆடும்போது
நேராக நில்லென்று - அப்போதே
நேர்மையை கற்றுக்கொடுத்தாள்.!

நான் சிறு பிள்ளையில்
என்னை நடக்க வைப்பாள்
நடக்கும்போதே – தடைகளைக்
கடக்கவும் கற்றுக்கொடுத்தாள்.!

நான் சிறு பிள்ளையில் – ஊரில்
வம்பு செய்து வந்தாலும்
கம்பு எடுத்து விரட்டாமல்
அன்பு எடுத்து தொடுத்தாள்
வம்பு செய்யாதே என்று.!

நான் எங்காவது செல்ல
பணம் கேட்டால்
சினம் கொள்ளாமல்
குணத்தோடு பணமும் எடுத்து – நல்ல
மனதோடு வாழ்த்தி அனுப்புவாள்
போய் வா என்று.!

செல்லமாக என்னைத் திட்டுவாள்
நான் சினுங்கினால்
செவியோரம் முத்தமிட்டு அணைப்பாள்.!

என்மீது
கோவப்படுவதுபோல் நடிப்பாள்.!
நான் முகம் சுழித்தால்
அவள் சற்று துடிப்பாள்
ஆவலோடு அள்ளி அணைப்பாள்.!

என் காதல் பருவத்தில்
அம்மா காதலிக்கிறேன் என்றதும்
அவள் பேதலிக்கவில்லை
இந்த வயதில் இது இயல்பு
காதலை அதிகப்படுத்தி
கடமையைக் குறைத்துவிடாதே
கடமையை வென்றால்
காதலையும் வெல்வாய் என்றாள்.!

எனக்கு தலைவலி என்றால்
அவளுக்கு நெஞ்சுவலி வந்துவிடும்.!
என் உடல்நிலை பாதிக்கப்பட்டால்
அவள் மனநிலை பாதிக்கப்படும்.!

மெத்தை பல இருந்தாலும்
அவள் மடிமீது தூங்கும் சுகம்
எனக்கு கிடைத்த வரம்.!

என் குழந்தை பருவத்தில் தாயாகவும்
என் இளமைப்பருவத்தில் தோழியாகவும்
என்னை வர்க்கிறாள்
என் அம்மா
இல்லை.! இல்லை.!!
என் தோழி.!!!


3 comments:

  1. உங்களுக்கு எல்லாமுமாய் இருக்கும் தெய்வம் நூறாண்டு வாழ்க....
    ...அன்னை ஓர் ஆலயம். .அவள் ஒரு தெய்வம் அவள் ஒரு பூமி ......

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்கும்,என் வலைப்பூவுக்கும் வந்து கருத்துரையிட்டதற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
    சந்தக்கவி.சூசைப்பாண்டி.
    www.kalanchiyem.blogspot.com

    ReplyDelete
  3. அம்மா எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை ! அவளை விட ஒரு உலகம் கிடையாது. அம்மாதான் சுவர்க்கம் ! அருமையான வரிகள் ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete